கோட்டயம்: கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, கோட்டயம் மாவட்டத்தில் பாதிப்பு அதிகளவு இருக்கிறது. தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்டப் பகுதிகளில் உள்ள கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவை அழிக்கப்படுகின்றன.
அந்த வகையில், கோட்டயம் மாவட்டத்தில் வெச்சூர், நீண்டூர், ஆர்ப்பூக்கரை ஆகிய மூன்று ஊராட்சிகளில் நேற்று(டிச.24) ஒரேநாளில் 6,017 பறவைகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட பறவைகளில் பெரும்பாலானவை வாத்துகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெச்சூரில் 133 வாத்துகளும் 156 கோழிகளும்; நீண்டூரில் 2,753 வாத்துகளும்; ஆர்ப்பூக்கரையில் 2,975 வாத்துகளும் கொல்லப்பட்டுள்ளன. மேலும், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து உறைந்த கோழிகளைக் கொண்டு வர லட்சத்தீவு நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் பறவைக் காய்ச்சல் - 8,000 பறவைகளை அழிக்க நடவடிக்கை