ஷீயோகார்: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். இவரது ஆட்சி காலத்தில் கடந்த 2007ம் ஆண்டு சீதாமர்ஹி-பாபுதாம் மொதிஹாரி இடையே ரயில் பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.204 கோடி மதிப்பில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 76 கிலோ மீட்டர் தொலைவில் அமையும் ரயில் வழித்தடத்தில், 2 சந்திப்பு ரயில் நிலையங்கள் உட்பட 10 நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் அதன்பிறகு உரிய முறையில் நிதி ஒதுக்கப்படாததால், ரயில் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதனால் நடப்பாண்டு நிச்சயம் சீதாமர்ஹி-பாபுதாம் மொதிஹாரி இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துவிடும் என பீகார் மாநில மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கும் நிலையில், அத்திட்டத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது பீகார் மாநில மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, ஷியோகாரை சேர்ந்த ஆர்யன் சவுகான் என்ற இளைஞர், மத்திய ரயில்வே அமைச்சருக்கு 1,000 ரூபாய்க்கு காசோலையை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ரயில்வே அமைச்சகத்தின் இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் பொறுக்க முடியாது. எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தாத வரை, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது.எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைத்து தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். இதுபோன்ற ஓரவஞ்சனையை கண்டித்து சம்பந்தப்பட்ட தொகுதிகளின் எம்பி, எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
எம்.பி ரமாதேவி தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றவில்லை. வரும் மக்களவை தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்." என்றார்.