டெல்லி: பிகார் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார், தொடர்ந்து நான்காவது முறையாக பதவியேற்கிறார். இந்த விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
பிகாரின் முதலமைச்சராக நிதிஷ் குமார், இன்று (நவ16) மாலை 4.30 மணிக்கு பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. அவர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்துவைக்கிறார்.
முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நவ.15ஆம் நடந்தது. இதில் பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் துணை முதலமைச்சர் பதவி சுஷில் குமார் மோடியிடமிருந்து, தர்கிஷோர் பிரசாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 125 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜகவுக்கு 74 தொகுதிகளும், நிதிஷ் குமார் கட்சி 43 இடங்களும் கிடைத்தன.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மகா கூட்டணி அமைத்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. இத்தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிகாரின் துணை முதலமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத் தேர்வு