பீகார்: பீகாரின் பெகுசாராய் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் ரஞ்சன் மிஸ்ரா - நிஷா குமாரி தம்பதியினர், கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது நிஷா குமாரி கர்ப்பமாக உள்ளார். தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று(ஏப்.2) காலை இருவரும் புது காரில், தியோகரில் உள்ள கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அப்போது, வழியில் ஜமுயி மாவட்டத்தில் பாட்டியா பள்ளத்தாக்குப் பகுதியில் ராஜ் காரை நிறுத்தியுள்ளார். தான் சிறுநீர் கழிக்கப்போவதாக கூறிவிட்டுச் சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுக்கலாம் எனக்கூறி மனைவியை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, திடீரென மனைவியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். கல்லால் முகத்தில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் நிஷா குமாரி மயங்கியுள்ளார். பின்னர், ராஜ் மனைவியை பள்ளத்தாக்கில் தள்ளி விட்டதாகத் தெரிகிறது. பிறகு மனைவி இறந்துவிட்டதாக நினைத்து ராஜ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
ஆனால், படுகாயமடைந்த நிஷா குமாரி இறக்கவில்லை, மயங்கிய நிலையில் வனப்பகுதியில் கிடந்துள்ளார். மூன்று மணி நேரம் கழித்து சுயநினைவு வந்ததும், வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலைக்கு வந்துள்ளார். பின்னர் அவ்வழியாக வந்த வாகனத்தில் ஏறி, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராஜ் ரஞ்சனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அதன் காரணமாகவே மனைவியினை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ஜார்கண்டில் 12ஆவது மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது