பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள மனேர் பகுதியில் உள்ள செங்கல் சூளையின் புகைப்போக்கி சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பெண் தொழிலாளர்கள் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். எட்டு தொழிலாளர்கள் படுகாயங்கள் உடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மனேர் போலீசார் கூறுகையில், மனேர் தாலூகாவில் உள்ள பியாபூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த செங்கல் சூளையில், செங்கற்களை சுடுவதற்காக மூன்றுக்கும் மேற்பட்ட புகைப்போக்கிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இருப்பினும், பல மாதங்களாக தீ வைத்து சுடும் பணியில் செய்யப்படவில்லை.
பல புகைப்போக்கிகளை உருவாக்கி ஒன்றாக தீ வைத்து சுடும் பணியை மேற்கொள்ள அதன் உரிமையாளர் திட்டமிட்டுள்ளார். இந்த செங்கல் சூளையில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணி புரிந்து வந்தனர். அந்த வகையில், இன்று (மார்ச் 20) வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு புகைப்போக்கி திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இதையும் படிங்க: கோவையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் செங்கல் சூளைகள்
அந்த நேரத்தில் 12 தொழிலாளர்கள் செங்கல் குவியலின் அடியில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து சக தொழிலாளர்கள் சூளையின் உரிமையாளருக்கும், மனேர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உடன் நாங்கள் சம்பவயிடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டோம். அரை மணி நேர போராட்டத்துக்கு பின்பு 4 பெண் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 8 தொழிலாளர்கள் படுகாயங்கள் உடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதையடுத்து படுகாயமடைந்தவர்களை பாட்னா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். நான்கு பெண்களின் உடல்களை உடற்கூராய்வுக்காக டானாபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். முதல்கட்ட தகவலில் உயிரிழந்தவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுகந்தி தேவி, குர்னி தேவா, ஷீலா தேவி மற்றும் பீகார் மாநிலத்தின் கயாவை சேர்ந்த சீதா தேவி என்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே செங்கல் சூளையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கல் சூளையை மூடுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது எனத் தெரிவித்தனர்.
பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு முறையான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால் அடிக்கடி விபத்து நிகழ்கிறது. அதில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. ஆகவே, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலார்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதையும் படிங்க: சகோதரரை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. 8 ஆண்டுகளுக்கு பிறகு காதலனுடன் சிக்கிய பெண்..