கொல்கத்தா : 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகளை தேசிய அளவில் ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணியில் பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்கம் சென்ற அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது நிதிஷ் குமாருடன், பீகார் துணை முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான தேஸ்வி யாதவ் உடன் இருந்தார்.
விமான நிலையத்தில் தரையிறங்கிய இருவரும், நபன்னாவில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்று முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினர். மம்தா - நிதிஷ் - தேஸ்வி ஆகிய மும்முனை தரப்புக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூடிய அறையில் நடைபெற்றதாக கூறப்பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது, பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டுவது, தேர்தலுக்கு முன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை அமைப்பது மற்றும் கூட்டணியில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச எதிர்க் கட்சித், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஜனதா தள தலைவர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் நிதிஷ் குமார் மற்றும் தேஸ்வி யாதவ் ஆகியொர் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக எல்லா எதிர்க் கட்சிகளையும் ஒன்று திரட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாஜக.வுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பது குறித்து உறுதி எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோர், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள உள்ளதாக கூட்டாக அறிவித்தனர்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்புக்கு ஆதரவு கோரினார்.
இதையும் படிங்க : Kochi Water Metro: நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ.. என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?