புதுச்சேரி: திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, இன்று முழு அடைப்பு போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக, புதுச்சேரியில் நேரு வீதி, அண்ணாசாலை, காந்தி வீதி, காமராஜர் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும், அரசுப் பேருந்துகள் காவல்துறையின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. மேலும், காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சிகளின் முழு அடைப்பு போராட்ட அழைப்பை ஏற்று ஆட்டோக்கள், டெம்போ வாகனங்கள் என எதுவும் இயங்கவில்லை. இதனால், புதுச்சேரியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறும்போது, "விவசாயிகளுக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், மீண்டும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வி - தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன்