நாட்டின் வர்த்தக பீடமான மும்பையில் 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தடா நீதிமன்றம் 2007ஆம் ஆண்டு யூசுப் மேனனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இவரது சகோதரரான யாகூப் மேனனுக்கு 2015ஆம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட யூசுப் மேனனின் சகோதரர் டைகர் மேனன், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆகியோர் தலைமறைவாகினர்.
இந்நிலையில், தற்போது நாசிக் சிறையில், ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள யூசுப் மேனன் (57) நேற்று, நெஞ்சு வலி, சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார். பின்னர், இவர் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட யூசுப் மேனன், இன்று காலை திடீரென சிறையிலேயே உயிரிழந்தார்.
இது குறித்துப் பேசிய நாசிக் சிறை காவல் ஆணையர் விஸ்வாஸ் நாங்கரே படில், “இவரது உயிரிழப்பிற்கான காரணம் எதுவும் தற்போதுவரை கண்டறியப்படவில்லை. இவரது உடல் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உடற்கூறாய்விற்குப் பிறகே, இவரது உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும்” என்றார்.