கரோனா வைரஸ் நோய் வேகமாக பரவிவரும் சூழலில், வெளிமாநில தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவித்துவருகின்றனர். போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் கிலோ மீட்டர் தள்ளியுள்ள சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதசத்தின் மதுரா, சஹரன்பூர், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாநில தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது, ஆரையா பகுதியில் சாலை விபத்தில் சிக்கி பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இவ்விரு சம்பவங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இதுகுறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "மனித நேயத்தை பாஜக அரசு கேலிக்குள்ளாக்கியுள்ளது என்பது இச்சம்பவம் மூலம் தெரியவருகிறது. இந்த மனப்பான்மையால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள்கூட பசி பட்டினியால் சிக்கி தவித்துவருகின்றனர். அரசின் செயல்பாடு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், சூழ்நிலை மோசமாகியுள்ளது. தொழிலாளர்களில் நிலை குறித்து கேட்டறிய யாரும் இல்லை. மாநிலத்திற்குள் நுழைவதற்காக காவல் துறையினரிடம் கெஞ்சிவருகின்றனர். காவல் துறையினர் தவறாக நடந்து கொள்கிறார்கள். பாஜக அரசின் குறுகிய மனப்பான்மையால் அவர்களின் வாழ்க்கை நரகமாகியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கோவிட்-19 விவகாரம்; சுதந்திர விசாரணைக்கு குரல்கொடுக்கும் இந்தியா