பெங்களூரு: குமாரசாமி மகன் திருமண நிகழ்வில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலுக்கும், காங்., முன்னாள் அமைச்சரின் பேத்தியான ரேவதி என்பவருக்கும், பெங்களூருவை அடுத்த ராமநகர மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதற்காக 42 வாகனங்களும், 120 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கர்நாடக காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், ஊரடங்கு நேரத்தில் நடந்த இத்திருமணத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை எனவும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் யாரும் முகக் கவசம் அணியவில்லை எனவும் பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில், இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, "தேவையான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டன, திருமணம் எளிமையான முறையில் நடத்தப்பட்டது. அது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி திருமண நிகழ்வை நடத்தியதற்காக, அவர்களை வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் இந்தப் பதிலால் குமாரசாமி தரப்பு சற்று நிம்மதி அடைந்துள்ளது.