உலகிலேயே மிகப்பெரிய நீர்பாசனத் திட்டமான காலேஸ்வரம் நீர்பாசன திட்டம் தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்குவதற்காக ரூ. 25,000 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு இத்திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்கினார். ஆனால் திட்டம் முடிவடையும்போது இதற்கு ரூ. 80 ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகியிருந்தது.
தெலங்கானா மாநிலத்தின் கோதாவரி நதியில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 1,832 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தில் 20 நீர் மின்தூக்கிகளும், 19 பம்ப் ஹவுஸ்களும் அமைந்துள்ளன. இதில் அமைந்துள்ள லக்ஷ்மிபூர் பம்ப் ஹவுஸ் உலகிலேயே மிகப்பெரிய பம்ப் ஹவுஸ் என்ற பெருமையை அடைந்துள்ளது.
பூமிக்கு அடியில் 470 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பம்ப் ஹவுஸானது இரட்டை சுரங்க பாதைகளையும், மிகப்பெரிய தண்ணீர் தேக்கத் தொட்டியையும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இங்கு தண்ணீரை மேலே கொண்டுவருவதற்காக 139 மெகாவாட் சக்தி கொண்டு ஏழு மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டார்கள் மூலம் நாள் ஒன்றிற்கு 3 டிஎம்சி நீரை மேல் எடுத்துவர முடியும்.
இந்நிலையில் இந்த பம்ப் ஹவுஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது சுமார் 111 அடி உயரத்திற்கு மூன்றாயிரம் கனஅடி நீர் மேலே கொண்டுவரப்பட்டது. இதனை தெலங்கானா முதலமைச்சர் கே.சி. சந்திரசேகர ராவ் புதன்கிழமை தொடங்கிவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.