ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இத்தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்கள் மத்தியில் எச்ஐவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பாக பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, கடற்கரை காந்தித் திடலில் இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், தேசிய சுகாதார இயக்க இயக்குநரும், மருத்துவருமான மோகன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், கல்லூரிகளுக்கு இடையே நடந்த நாடகப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த செவிலியர் இந்திராணி, கல்லூரிகள் அளவில் முதலிடத்தை இடத்தைப் பிடித்த செவிலியர் கல்லூரி, பள்ளிகள் அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து நாவலர் நெடுஞ்செழியன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இப்பேரணியில் கலந்துகொண்ட மாணவியர்கள் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாகப் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.