சுற்றுச்சூழல் துாய்மை என்றால் என்ன? நாமும் நம்மைச் சுற்றியுள்ள இடத்தையும் துாய்மையாக வைக்க வேண்டும். முக்கியமாக நம் வீடுகளில் மரங்களை நட்டு வைத்து வளர்ப்பதே சுற்றுச்சூழலை துாய்மையாக்கும் முதற்படி.
நம் முன்னோர்கள் வாழ்க்கை முறை:
நம் முன்னோர்கள் ஒவ்வொரு வீட்டிலும் வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும், துாய்மையின் அவசியத்தை உணர்ந்தும் ஒவ்வொருவரும் வீட்டின் முன்புறத்தில் பெரும்பாலும் வேம்பு மரத்தினை நட்டு வளர்ப்பர்.
ஒவ்வொரு தெருவிலும், ஊர் எல்லையிலும் அரச மரம், புளிய மரம், தென்னை மரம் உள்ளிட்ட பலவகை மரங்களை நட்டு வளர்ப்பர். மேலும், கடைக்குச் சென்றாலும், வெகுதூரம் செல்ல வேண்டியதாக இருந்தாலும் சரி, நடந்தே செல்வர். இதனால் வழியெங்கும் உள்ள மரங்களிலிருந்து வரும் இயற்கைக் காற்றை சுவாசிக்க நேர்வதால், உடலுக்கு புத்துணர்வு உண்டாகிறது. மரங்களுக்கு அசுத்தக் காற்றை உள்ளிழுத்து துாய்மையான காற்றை வெளியிடும் தன்மை உண்டு. முக்கியமாக அதிகாலையில் மரங்களில் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருப்பதால் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது நம் உடலில் உள்ள நச்சுக் காற்று வெளியேறி, உடல் துாய்மை அடைகிறது. இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்தும், மற்ற வியாதிகளிலிருந்தும் நம் முன்னோர்கள் பாதிக்கப்படாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். சுற்றுப்புறம் முழுவதும் துாய்மை அடைவதுடன் மாதம் மும்மாரி பெய்து, மக்கள் செழிப்புடன் வாழ்ந்தனர்.
மரங்களின் முக்கியத்துவம்:
இப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்திலிருந்து நாம் விலகி, இயந்திர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நோய்களின் பிடியில் சிக்கியுள்ளோம். தற்போது உள்ள வாழ்க்கை முறையில் நாம் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இடம் தருகிறோம். ஆனால், ஒரு மரக்கன்றை நட்டுவைக்க மறந்து (மறுத்து) வருகிறோம். கேட்டால், வீட்டின் அருகே மரம் வளர்த்தால், வீட்டிற்கு சேதம் உண்டாகும் என காரணம் கூறுகிறோம்.
இதுமட்டுமின்றி காடுகளில் உள்ள மரங்களையும் நமது தேவைக்காக அழித்துவரும் நம் வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க மறுக்கிறோம். இப்படி நம்முடைய தேவைக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் மரங்களை அழித்துவருவதால், காடுகளும் அழிக்கப்பட்டுவருகின்றன.
இதனால் பருவ மழை பொய்த்துவிடுகிறது. இப்போது நாம் குடிக்கும் நீரைக்கூட காசு கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 200 அடி ஆழம் வரை நீரை ஆழ்துளை போட்டு உறிஞ்சி உபயோகப்படுத்தும் நாம், அதனை சிக்கனமாக பயன்படுத்த மறக்கிறோம். இதன் விளைவாக பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீரின் அளவு குறைந்து வறண்ட பாலைவனமாக மாறும் அபாயத்தில் உள்ளோம் என்பதை நாம் அறிந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கிறோம்.
வாகனங்கள் அதிகரிப்பு:
இப்படி காடுகளின் அவசியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில், காற்றுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளடக்கிய பல வாகனங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. முன்பு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மக்கள் சரளமாக நடந்து சென்றனர்.
ஆனால், தற்போது 10 அடி துாரமுள்ள கடைக்குக் கூட வாகனத்தில் இன்றைய இளைய சமுதாயத்தினர் சென்று வருகின்றனர். இப்படி சிறு சிறு விஷயத்திற்கு தேவையில்லாமல் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். இதனால் காற்று மாசடைகிறது.
இதையடுத்து, அதிகரித்துவரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் காற்று மாசுபடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் அதிகளவு புகை, ரசாயனக் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படாததால் காற்று மாசடைவதுடன், நிலமும் மாசடைகிறது. இதனால் நீரோடைகள், ஆறுகளும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் மண்ணின் வளம் கெட்டுவிடுகிறது.
விவசாயத்தில் ரசாயனம்:
இப்படி ஒருபுறமிருக்க, விவசாயத்தில் அதிக லாபத்தைக் காண சிலர், ரசாயன பூச்சி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்துவதால், நாம் உண்ணும் உணவில் நச்சு கலந்துவிடுவதால், பணம் கொடுத்து நோயை வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இப்படி நாம் அறியாமல் நம்முடைய தேவையை மட்டும் எண்ணி செய்யும் ஒவ்வொரு சிறு சிறு நிகழ்விலும், செயலிலும் தான் நமக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதை நாம் உணர மறக்கிறோம்.
இயற்கை காற்றை சுவாசிக்க மறக்கும் நாம், காசு கொடுத்து வாங்கிய ஏர் கூலர், ஏசி, ஃபேன் போன்றவற்றில்தான் நாம் அதிகளவிலான காற்றை சுவாசிக்கிறோம். இயற்கையை மறந்து செயற்கை உலகிற்கு சென்றுவிட்ட நாம், நம்முடைய அடுத்த தலைமுறையினரையாவது இயற்கை என்னும் வசந்தத்தில் வாழ வைக்க முயற்சிப்போம்.
இதற்காக நாம் ஒன்றும் பெரிதாக எதையும் தியாகம் செய்யத் தேவையில்லை. நாம் நம்முடைய வீட்டிலோ, தெருவிலோ, பேருந்து நிறுத்தத்திலோ இப்படி ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மரக்கன்றினை நட்டு, அதனை தினமும் பராமரித்து வளர்ப்போம். இதைச் செய்தாலே போதும் நீங்கள் வாழ்க்கையையே சாதித்ததற்கு சமம்.
வீட்டில் உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் ஏழு மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். ஆனால், இதனால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று இறந்தவருக்கும் தெரியாத வகையில், மெதுகொல்லி நோயாக உள்ளது.
இந்த உயிரிழப்பில் ஆண்டுக்கு ஆறு லட்சம் குழந்தைகளும் உள்ளடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்போது உலகளவில் அதிகளவில் மாசடைந்த 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 13 நகரங்கள் உள்ளதாக அறிவியல், சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
இதனை நினைவில் கொண்டு நாம் செயல்பட்டால் நமது அடுத்த தலைமுறையாவது நல்ல காற்றை சுவாசித்து, சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
மரங்களை நட்டு வளர்ப்போம்! இயற்கையோடு இயைந்து வாழும்!