சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் வசிக்கும் ஒரு கூட்டு குடும்பத்திலுள்ள 11 பெண்கள், தங்களை வழிநடத்திய மாமியாரை நினைவுகூரும் விதமாக கோயில் ஒன்றினை கட்டி வழிபட்டுவருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மாமியார் என்றாலே கொஞ்சம் முசுடு’என்ற பரவலான எண்ணமிருக்கும் இக்காலக்கட்டத்தில் தங்களது மாமியார் மீது இந்தப் பெண்கள் வைத்திருக்கும் அன்பு ஆச்சர்யமூட்டுகிறது.
பிலாஸ்பூர் மாவட்டம், ரத்தன்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர், சிவபிரசாத் தம்போலி. இவர் தன் மகன்கள், பேரக்குழந்தைகள் என சந்தோஷம் பொங்கும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துவருகிறார். இவருடைய வீட்டில் மொத்தம் 39 குடும்ப உறுப்பினர்கள்.
எல்லையில்லா அன்பை பரிமாறிக் கொள்ளும் இவரது குடும்பத்தினருக்கு, முன்னுதாரணமாகத் திகழ்ந்து வழிநடத்தியவர் சிவபிரசாத்தின் மனைவி கீதாதேவிதான். இவர்களுடைய மகிழ்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் வித்திட்டவரும் அவரே..!
தனது மனைவி குறித்து சிவபிரசாத் நம்மிடம் பகிர்கையில், ’எனது மனைவி அடுத்த தலைமுறைக்கு மத கோட்பாடுகளையும், நல்லப் பண்புகளையும் கடத்தியுள்ளார். அதுதான் எங்கள் குடும்ப ஒற்றுமைக்கு மிக முக்கியமான காரணம்’ என்றார்.
கடந்த 2010ஆம் ஆண்டு கீதா தேவி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பத்தாண்டுகள் கடந்த நிலையிலும்கூட, இன்னமும் கீதா தேவியின் நினைவலைகளுடன்தான் இக்குடும்பம் நகர்கிறது. அதற்கான சான்றுதான் கீதாதேவிக்காக கட்டியெழுப்பப்பட்ட கோயில். கீதா தேவியின் 11 மருமகள்களும், தங்களது மாமியாரைக் கடவுளாக நினைத்து மனதுருகி நாள்தோறும் வழிபாடு நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:'மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் முன்னாள் ராணுவ வீரர்: நிகழ்கால ஷாஜகான் மாடசாமி!