உத்தரப் பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அஞ்சனாவுக்கு, சமீபத்தில் தான் அகிலேஷ் திவாரி என்ற நபருடன் விவகாரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அஞ்சனாவுக்கு ஆசிப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து, இஸ்லாமிய மதத்திற்கு மாறிக்கொண்ட அஞ்சனா, தனது பெயரை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
இருவரும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய தருணத்தில், வேலைக்காக ஆசிப் சவூதி அரேபியாவுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது தான், ஆயிஷாவுக்கு அவரது மாமியாரின் உண்மை முகம் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆன பெண் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, ஆயிஷாவை துன்புறுத்த தொடங்கியுள்ளார்.
தினந்தோறும் சித்திரவதை அனுபவித்த ஆயிஷா, ஒருகட்டத்தில் மனமுடைந்து உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு முன்பு தீயிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் உடனடியாக அப்பெண்ணை மீட்டு அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஆயிஷா உடலில் 80 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்ட காரணத்தால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ராஜஸ்தானின் முன்னாள் ஆளுநர் சுக்தேவ் பிரசாத்தின் மகன் காங்கிரஸ் தலைவர் அலோக் பிரசாத்துக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.