கேரளாவில் முதல்கட்டமாக இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கொல்லம் மாவட்டம் ஜான்ஸ் முந்திரி தொழிற்சாலை வாக்குச்சாவடியில் சிபிஎம் முத்திரைப் பதித்த முகக்கவசம் அணிந்தபடி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் பணியில் ஈடுபட்டார்.
இதனால் சர்ச்சைகள் கிளம்ப, அவர் வேறொரு முகக்கவசத்தை அணிந்து தன் அலுவல்களைத் தொடர்ந்தார். இருப்பினும் அவரது இந்நடவடிக்கை கட்சி சார்ந்தது என கேரள காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட ஊழியரைப் பணியிலிருந்து விலக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. அதன்படி, வாக்குச்சாவடியிலிருந்து அந்த பணியிலிருந்து விலக்கப்பட்டார்.
கேரள உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக இன்று(டிச.8) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில், 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
இரண்டாம் கட்டமாக டிசம்பர் 10ஆம் தேதியன்று கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மூன்றாம் கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.