நூற்றாண்டு பழமைவாய்ந்த ரவிதாஸ் கோயில் வன நிலத்தில் கட்டியதாகக் கூறி டெல்லி மேம்பாட்டு ஆணையம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆகஸ்ட் 10ஆம் தேதி இடித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மிக முக்கிய கோயிலான ரவிதாஸ் கோயில் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில், போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உட்பட அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இந்த கோயில் இடிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை இன்று உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அப்போது, கோயில் இருந்த 200 மீட்டர் சதுர நிலத்தை வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக, அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ரவிதாஸ் பக்தர்கள் கமிட்டியிடம் நிலம் ஒப்படைக்கப்படும். அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை செய்த பிறகே, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.