கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்றுவரும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியின் மீது அதிருப்பதி கொண்ட எம்எல்ஏக்கள் 20 பேர் ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் பரிசீலனையில் வைத்திருக்கும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க அரசு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்துள்ளது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் எனக் கடந்த ஒரு வாரமாக பாஜக வலியுறுத்திவருகிறது. அம்மாநில ஆளுநரும் சபாநாயகருக்கு வாக்கெடுப்பை விரைந்து முடிக்க வற்புறுத்தினார். ஆனால் முதலமைச்சர் குமாரசாமி வாக்கெடுப்பு நடத்த மேலும் கால அவகாசம் கேட்டு விவாதத்தை இழுத்தடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கூடிய அவை விவாதம், அமளி, குழப்பத்தைச் சந்தித்துவந்தது. சபாநாயகரும் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவெடுத்தார். ஆனால் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஒத்துழைப்பு தராததால் அவை இரவு 11.45 மணி அளவில் ஒத்திவைக்கப்பட்டது.
இன்று அவை மீண்டும் கூடும் நிலையில் மாலை 4 மணியுடன் விவாதம் நிறைவடைந்து 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் உறுதியளித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225ஆக உள்ள நிலையில் எதிர்கட்சியான பாஜகவின் எண்ணிக்கை 107ஆக (இரு சுயேச்சை ஆதரவையும் சேர்த்து) உள்ளது. குமாரசாமி கூட்டணி அரசின் ஆதரவு 117ஆக இருந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நீங்கினால் பலம் 101ஆகக் குறைந்துவிடும். இந்த சூழல் உருவாகும் பட்சத்தில் அரசு பெரும்பான்மை இழந்து ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 13 அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் சபாநாயர் முன் ஆஜராக ஒருமாத காலம் அவகாசம் கேட்டு தற்போது கடிதம் எழுதியுள்ளனர்.