கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்துவரும் சூழலில், தாங்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் மறுப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், ராஜினாமா கடிதம் அளித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராகி ராஜினாமா கடிதத்தை ஏற்க கோரிக்கை வைக்கலாம் என உத்தரவிட்டது.
மேலும் ராஜினாமா அளித்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க காவல் தலைமை இயக்குநருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ராஜினாமா கடிதம் அளித்தது தொடர்பாக சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே 10 எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதங்களில் எட்டு பேரின் கடிதம் ஏற்புடையது இல்லை என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த காலம் நிறைவடைவதற்குள் அவசர அவசரமாக பத்து உறுப்பினர்களும் கர்நாடக சட்டப்பேரவைக்கு வந்து, சபாநாயகர் ரமேஷ் குமாரைச் சந்தித்தனர்.
அப்போது, 10 எம்எல்ஏக்களில் 8 பேர் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதத்தை அளித்தனர். அவர்களுடன் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய சபாநாயகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ராஜினாமா கடிதம் கொடுக்க வந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள், என்னிடம் முன் அனுமதி பெறவில்லை. நான் அலுவலகத்தை விட்டு வெளியே சென்றபிறகுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு பயந்துகொண்டு நான் ஓடிவிட்டேன் என்று சொல்வது பொய்யான வாதம்.
கடந்த திங்கள் கிழமை, ராஜினாமா கடிதங்களை நான் ஆய்வு செய்தேன். அதில், எட்டு கடிதங்கள் ஒழுங்கற்ற முறையில் இருந்தன. மற்ற கடிதங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்வேன்.
அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தங்களை யாரோ மிரட்டியதாகவும் அதற்குப் பயந்து கொண்டுதான் மும்பை சொகுசு விடுதியில் தஞ்சமடைந்ததாகவும் கூறினார்கள். அவர்கள் என்னிடம் முதலிலேயே வந்திருக்க வேண்டும். நான் அவர்களைக் காப்பாற்றியிருப்பேன். என்னிடம் அளிக்கப்பட்ட புதிய கடிதங்கள் ஏற்புடையதா என்பதை இரவு முழுவதும் சரிபார்த்த பின்னரே முடிவெடுப்பேன்" என்றார்.