நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கரோனா வைரஸ் ரூத்ரதாண்டவம் ஆடி வருகிறது. தினம்தோறும் மூன்றாயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயால் ஷர்மாவின் மனைவி விமலா சர்மா கரோனா பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு 93 வயது ஆகிறது. மருத்துவரின் தீவிர சிகிச்சையால் கரோனா வைரஸை வென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். டெல்லியில் அதிக வயதில் கரோனாவில் குணமடைந்த நபர் என்ற பெருமையையும் விமலா சர்மாவுக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய விமலா சர்மாவின் மகன் அசுதோஷ் தயால் சர்மா, "இந்த நோயில் இருக்கும் ஒரே கடினமானது, உறவினர்களை பார்க்க முடியாது. எனது தாயார் மருத்துவமனையில் 18 நாள்கள் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இரண்டு முறை மட்டும் தான் உரையாடினேன். இந்த மாதிரியான சூழ்நிலையில் குடும்பத்தினரும், நோயால் பாதிக்கப்பட்டவரும் நம்பிக்கையை இழக்காதது முக்கியம்" எனத் தெரிவித்தார்.