ஏழு வயது குழந்தை மெகருன்னிசா, நேற்றுவரை தான் ஓடி விளையாடிய வீடு இன்று நிர்மூலமாக இருப்பதை ஒரு கண்ணிலும், தன் தந்தை வருகையை எதிர்நோக்கி வீட்டு வாசலை மறு கண்ணிலும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இதற்கு சிறிது நேரத்திற்கு முன்தான், தனது தந்தையுடன் இதே வீட்டில் தனது விளையாட்டு பொருள்களை மெகருன்னிசா தேடிக்கொண்டிருந்தாள்.
இப்போது, அவளது கண்கள் விளையாட்டு பொருள்களைவிட தந்தையின் கண்களையே தேடுகிறது. இதுதான் தந்தையுடன் செலவிடப்போகும் கடைசி நிமிடம் என்று அந்தப் பிஞ்சு குழந்தைக்கு தெரிந்திருந்தால், நிச்சயம் தந்தையை தன்னைவிட்டு பிரிந்துபோக அனுமதித்திருக்க மாட்டாள்.
தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிஞ்சோரா என்ற சிறிய கிராமத்தில் உள்ளது மெகருன்னிசா வீடு. மெகருன்னிசா குடும்பம் அவளது தாய்வழி பாட்டியை சந்திக்க ஜூன் 8ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்றிருந்தது.
இந்த சூழலில், மெகருன்னிசா வீட்டின் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல் துறையும் வீட்டை சுற்றி வளைத்தன.
தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டதை உணர்ந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி உமர் தோபி உள்ளிட்ட நான்கு பயங்கராவதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாகியால் சுட்டனர். இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஷெல் குண்டுகளையும் வீசியதில், பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். மெகருன்னிசா வீடும் தரைமட்டமானது.
மறுநாள், தாக்குதலில் இடிந்துபோன வீட்டை காண மெகருன்னிசா குடும்பத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. தான் வளர்ந்த அழகிய வீடு சிதைந்திருப்பதை மெகருன்னிசாவும் அவளது தந்தை தாரிக் அகமது பாலும்(32) கண்ணீருடன் பார்த்துக்கொணடிருந்தனர். அப்போது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய தாரிக் அகமது பால், 12 ஆண்டுகள் கடினமாக உழைத்து இந்த வீட்டை கட்டினேன் என கண்ணீர் மல்க கூறினார்.
ஆனால் துயரம் அவர்களை துரத்திக் கொண்டே இருந்தது. ஈடிவி பாராத் செய்தியாளரிடம் பேசி மூன்று மணி நேரத்திற்கு பின், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிரமத்திற்குள் நுழைந்துள்ளார். துப்பாக்கி முனையில் அகமது பாலை கிராமத்திற்கு வெளியே இருந்த பழத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மறுநாள், கிராம மக்கள் மெகருன்னிசாவின் தந்தையை உயிரில்லாத சடலமாக கண்டெடுத்தனர். அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதை அவர் உடலைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அவரை கொன்றவர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பாட்டி வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த மெகருன்னிசாவின் வாழ்க்கை சில மணி நேரங்களில் தலைகீழாக மாறியுள்ளது. மெகருன்னிசாவும் அவள் தங்கையும் பாசமிகு தந்தையை எதற்கு இழந்தோம் என்றே தெரியாமல் இழந்துள்ளனர். மெகருன்னிசாவின் தாயோ, கணவனை இழந்த துக்கத்தோடு தன் மகள்களின் எதிர்காலத்தை நினைத்து கலங்கி நிற்கிறார். எங்கள் காஷ்மீரின் ரோஜாப் பூ விதவைகள் பார்த்து அழதானா என ந.முத்துக்குமார் எழுதிய வரிகள்தான் அவர் நிலையை பார்த்தால் நினைவுக்கு வருகிறது.
இந்தப் பனிப் பிரதேசத்திற்குள் நூற்றுக்கணக்கான மெகருன்னிசாக்களின் மகிழ்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக நடந்துவரும் இந்தச் சம்பவங்கள் எப்போது முடிவுக்குவரும் என்பதே உறவுகளை இழந்த மெகருன்னிசாக்களின் கேள்வியாகவுள்ளது.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை இன்று நாம் அனுசரித்துவருகிறோம். குழந்தைகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கும் சூழலை உருவாக்காதவரை, நிச்சயமாக நம்மால் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தேசத்தை உருவாக்க முடியாது.
இதையும் படிங்க: தொடர்ந்து எல்லை மீறும் பாகிஸ்தான் - பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு