வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு குற்றப்பிரிவு புலனாய்வுக் குழு ; நான்கு இஸ்லாமியர்களைக் கொன்றது, அவர்களின் உடல்களை கோகுல்பூரியில் உள்ள ஒரு சாக்கடையில் வீசியது தொடர்பாக இரண்டு புதிய குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய உள்ளது.
"இந்த வழக்குகளின் விசாரணையில், உச்சக் கலவரத்தின்போது, 2020 பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் 125 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.
இதில், சில உறுப்பினர்கள் வாட்ஸ்அப் குழுவில் செய்திகளை அனுப்புவதும் பெறுவதும் மட்டுமே செய்திருக்கின்றனர். இன்னும் சிலர் அத்தகவல்களை வைத்து தீவிரக் கலவரத்தில் ஈடுபட்டனர்"என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
இறந்த நான்கு பேரில், அமீர் அலி, ஹாஷிம் அலி ஆகியோர் சகோதரர்கள். அவர்கள் இரவு 9 முதல் 10 மணி அளவில் கொலை செய்யப்பட்டனர்.
பின்னர் நேரில் கண்ட சாட்சிகள், தொழில் நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் ஹாஷிம் அலியையும், அவரது சகோதரரையும் கொலை செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், ஷிவ்புரியின் ராஜதானி பள்ளிக்கு அருகே ஒரு இனிப்புக் கடையின் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பிரிவு காவல் துறை, மற்றொரு குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்ய உள்ளது.
நேரில் கண்ட சாட்சிகள், சி.சி.டி.வி காட்சிகள், செல்போன் அழைப்பு விவரப் பதிவுகள் (சி.டி.ஆர்), பிற தொழில் நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
சி.சி.டி.வி காட்சிகள் சேகரிக்கப்பட்டன, ஏனெனில் பெரும்பாலான சி.சி.டி.வி கேமராக்கள் கலவரக்காரர்களால் அழிக்கப்பட்டன. பிப்ரவரி 25 நள்ளிரவு வரை இனிப்புக்கடை ஊழியரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிப்ரவரி 26 நண்பகல், அனில் இனிப்புக்கடையின் கிட்டங்கியில், ஒரு ஆண் நபரின் சடலம் குறித்து கோகுல்புரி காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறை, உடல் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் அவர் தில்பார் நேஹி என அடையாளம் காணப்பட்டார்.
கலவரக் கும்பல் இந்துக்களின் சொத்துக்கள், ஒரு புத்தகக் கடை, டி.ஆர்.பி பள்ளி, அனில் இனிப்புக்கடையின் கிட்டங்கி என பலவற்றைக் குறிவைத்து தாக்கியது தெரியவந்துள்ளது.
இதனிடையே, மஹாலக்ஷ்மி என்க்ளேவைச் சேர்ந்த ராகுல் சோலன்கியும் மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். கோகுல்புரி, தயால்பூர் காவல் நிலையங்களில் கலவரம், தீ வைத்தல், கொலை உள்ளிட்ட 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.