கர்நாடகா மாநிலத்துக்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தும்குரு மாவட்டத்திலுள்ள சித்தகங்கா மடத்துக்குச் சென்றார். பின்னர், ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார சுவாமி நினைவு அருங்காட்சியகத்தை அவர் திறந்துவைத்தார்.
பயணத்தின் இரண்டாம் நாளான இன்று பெங்களூருவில் நடைபெறும் 107ஆவது அறிவியல் மாநாட்டை மோடி தொடங்கிவைத்தார். இதில் சர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டில் உரையாற்றிய மோடி, "இந்தாண்டின் நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சியே அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்ததாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 2020ஆம் ஆண்டில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டு பல அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.
அப்போதுதான் நம்முடைய கனவுகள் மெய்ப்படும். சர்வதேச அளவில் புதிய கண்டுபிடிப்புக் குறியீட்டில் இந்தியா 52ஆவது இடத்திலிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
முந்தைய 50 ஆண்டுகளைக் காட்டிலும், ஐந்து ஆண்டுகளில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளது. இதற்குக் காரணமான விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது நாட்டிலுள்ள இளம் அறிவியலாளர்களுக்கு நான்கு குறிக்கோள்கள் இருக்க வேண்டும். புதிய பொருள்களைக் கண்டுபிடிப்பது, அதற்கு காப்புரிமை பெறுவது, அவ்வாறு பெற்றபின் உற்பத்தியைப் பெருக்குவது, அவ்வாறு உற்பத்தியைப் பெருக்கி அதனை சந்தைப்படுத்தி வெற்றிபெறச் செய்வது ஆகிய நான்கு இலக்குகளை நீங்கள் செய்தால் குறுகிய காலத்திலேயே நமது நாடு அதீத வளர்ச்சியடையும்" என்றார்.
இதையும் படிங்க: 'புகழ்பெற்ற கவிஞரை இந்து விரோதி என்று அழைப்பதா?' - பாலிவுட் பாடலாசிரியர்