சீனாவில் பரவிய கரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும் பரவியுள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டு தங்கள் நாட்டிற்குள் வந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகக் கவனமாகக் கையாண்டுவருகின்றன. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அந்தந்த நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்கள் மூலமாகவே வைரஸ் பரவும்.
இதனைக் கருத்தில்கொண்டு இந்தியாவிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவேளை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்தி சிறப்புச் சிகிச்சையும் அளித்துவருகின்றனர். இதற்கான மருத்துவக் குழுவும் விமான நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கடுமையான கெடுபிடிகளுக்கு இடையே, சீனாவிலுள்ல வூஹான் மாகாணத்திலிருக்கு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
சீனாவிலிருந்து கொல்கத்தா விமான நிலையத்தில் இறங்கிய அந்த இளைஞருக்கு வைரஸ் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதன்பின், திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்தச் சூழலில், கேரள இளைஞருடன் விமானத்தில் பயணித்த எட்டு நபர்களை மேற்கு வங்க சுகாதாரத் துறை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க சுகாதார இயக்குநர் அஜய் குமார் சக்ராபோர்டி கூறுகையில், “ஜனவரி 23ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் (கொல்கத்தா) வந்திறங்கிய எட்டு நபர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அதில் மூன்று பேர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள். இருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த இருவரிடம் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு, அவர்களுக்கு முறையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் சிகிச்சை: இரவுபகல் பாராது சேவையாற்றும் செவிலியர்!