கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கால் ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. சரக்கு ரயில்கள் மட்டுமே தொடர்ந்து இயக்கப்பட்டுவந்தன. இதனிடையே மே இரண்டாவது வாரம் முதல் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் முதல்கட்டமாக 200 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்த இந்திய ரயில்வே, அதற்கான முன்பதிவை இன்று காலை தொடங்கியது. இந்தச் சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய இணையதளம் வழியாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பதால் பலரும் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், "இணைய வசதி சென்றுசேராத கிராமங்களிலுள்ள மக்களுக்கு ஏதுவாக நாளை முதல் நாடு முழுவதும் உள்ள சுமார் 1.7 லட்சம் சேவை மையங்களிலிருந்து இந்தச் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்படவுள்ளது. அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ளது.
கரோனா பாதிப்பு இல்லாத ரயில் நிலையங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறோம். ரயில் சேவைகளை அதிகரிப்பது குறித்து வரும் நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும். ரயில்வே நிலையங்களிலுள்ள கடைகளைத் திறக்கவும் அனுமதியளித்துள்ளோம். ஆனால் அந்தக் கடைகளில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்வதில் உத்தரப் பிரதேச அரசும், குஜராத் அரசும் சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டிய அவர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் விமர்சித்தார்,
இதையும் படிங்க: இன்று முதல் விமான டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறதா?