கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது வெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதனை அணியாமல் பொறுப்பற்று பலர் வெளியே சுற்றித்திரிந்து வரும் சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளன.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் முகேஷ் குமார் பிஜபத் (40) என்பவர் முகக் கவசம் அணியாமல் வீதியில் சாவகாசமாக நடந்து சென்றுள்ளார்.
இதனைக் கண்ட சில காவலர்கள், முகேஷை கண்டித்து முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், குடிபோதையிலிருந்த முகேஷ் காவல் துறையினர் சொன்னதைக் கேட்காமல் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் நடந்த கைகலப்பின் போது, முகேஷை மடக்கி கீழே தள்ளி காவலர் ஒருவர் அவர் கழுத்தின் மீது முழங்காலை வைத்து அழுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவரின் கழுத்தில் காவல்துறையினர் முழங்காலை வைத்து அழுத்தி படுகொலை செய்த சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், ஜோத்பூரில் நடந்த இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்கு ஆளாகியுள்ள அந்தக் காவலர் தற்காப்பு நடவடிக்கையாகவே அதனைச் செய்ததாக ஜோத்பூர் துணை காவல் ஆணையர் (மேற்கு) பிரிதி சந்தா விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: போராட்டக்காரரை கீழே தள்ளி மண்டையை உடைத்த காவலர்கள்