உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்): உத்திரப் பிரதேச மாநிலத்தின் உள்ளூர் ரவுடி கும்பலின் தலைவனான விகாஸ் துபே மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரை காவல் துறையினர் கைது செய்யசென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் இரண்டு ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனிடையே, துபேவை கைது செய்ய காவல் துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இச்சூழலில், துபேவின் சகோதரரான தீப் பிரகாஷ் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல், பிரகாஷின் மனைவி, மகள் ஆகியோரும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. துபேயின் தாயிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வந்தன.
நிழல் உலக தாதா மைத்துனர் கைது...!
தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபே, ஹமிர்பூர் மாவட்டம் மவுதாகாவில் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதேபோல் இந்த வழக்கில் ஜூலை 8ஆம் தேதி 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்றபோது, குற்றவாளி பிரபாத் மிஷ்ரா காவலர்கள் பிடியில் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனடியாக விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற காவலர்களை மீறி தப்பி ஓடியதால் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த பிரபாத் மிஷ்ரா, உடனடியாக கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கான்பூர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது ரவுடி விகாஸ் துபேயுடன் இருந்த பகுவா துபேயை, எட்டாவா பகுதியில் இன்று காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர். அவரிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.