விசாகப்பட்டினம், கோபாலப்பட்டினம் ஆர். ஆர். வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலிவினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலையிலிருந்து கசிந்த அபாயகரமான ரசாயன வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியுள்ளது. உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டதுடன் பலர் மயக்கமடைந்துள்ளனர். 10 பேர் உயிரிழந்தனர்.
தற்போது வரை சுமார் 1,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஆந்திர அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
சமீபத்திய தகவலின் படி, தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய என்.டி.ஆர்.எஃப் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா குமார், ”விசாகப்பட்டினத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கென ஒரு என்.டி.ஆர்.எஃப் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 400 குடும்பங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரசாயன வாயுவின் தாக்கத்தைக் கணக்கில் கொண்டு, நாங்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருக்கிறோம்” என்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவுடன் பிரதமர் மோடி, அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ள நிலையில், இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, விசாகப்பட்டினத்தின் நிலையை நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் கிஷன் ரெட்டியும் ஆந்திராவின் தலைமைச் செயலாளர், காவல் இணை இயக்குநர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எல்ஜி பாலிமர்ஸ் ஆலையில் அதிகாலை மூன்று மணியளவில் ஆபத்தான வாயு கசிந்த நிலையில், ஸ்டைரீன் எனப்படும் செயற்கை ரசாயனம் தான் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள், உடல் தடிப்புகள், வாந்தி, மயக்கம் ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு: 8 பேர் மரணம்