டெல்லி தேர்தல் முடிவுகள் ஒருவித ஆச்சரியத்தைப் அளித்துள்ளது. உண்மையில் பாஜக களத்தில் இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் தலைமையில் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு போலவே, ஆம் ஆத்மியின் முதல் எதிரியான பாஜக எட்டு தொகுதிகள் என்ற ஒற்றைப்படை எண்ணிலேயே வெற்றி பெற்றிருக்கிறது.
1996ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை மூன்று முறை டெல்லியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் வெறுங்கையுடன் இருக்கிறது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 54 விழுக்காடு வாக்கு வங்கியைப் பெற்று ஆம் ஆத்மி புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
சமீபத்திய தேர்தல், அதாவது 2015ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை விட வாக்குப்பதிவு ஐந்து விழுக்காடு குறைவு. ஆம் ஆத்மி கட்சி கடந்த தேர்தலை விட ஒரு விழுக்காடு வாக்குகளை இழந்திருந்தாலும் 62 தொகுதிகளை அந்தக் கட்சி கைப்பற்றியது ஆச்சரியத்தையே அளிக்கிறது.
பாஜகவுக்கு 38.8 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. இது கடந்த தேர்தல்களை விட ஆறரை விழுக்காடு அதிகம் ஆகும். ஆனாலும் 8 தொகுதிகளையே பெற முடிந்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தேர்தலில் 40.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி தன் அடையாளத்தை இழந்து, டெல்லி அரசியலிலிருந்து காணாமல் போய்விட்டது.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி படிப்படியாக குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 24.5 சதவிகித வாக்குகள் 2015ஆம் ஆண்டு 9.6 சதவிகித வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் 63 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டையே இழந்துள்ளது.
2015ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதில், 60 தொகுதிகளில் 10,000 வாக்குகள் வித்தியாசத்திலும் 45 தொகுதிகளில் 20, 000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
மூன்று தொகுதிகளில் பாஜக 6,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போதையை தேர்தலில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த சிஷோடியாவின் வெற்றி கடைசி வரை தீர்மானிக்க முடியாததாகவே இருந்தது.
சிஷோடியா திக்கி திணறி 3,000 வாக்குகளுக்கு குறைவாகவே வெற்றி பெற்றிருக்கிறார். இதுவெல்லாம் கெஜ்ரிவால் அரசுக்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணி. சிறந்த மக்கள் பணி ஆற்றிதற்காக, வாக்காளர்கள் அளித்த பரிசு, கெஜ்ரிவால் அரசின் பொறுப்பை அதிகரித்துள்ளது.
தலைநகர் வாழ் குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை அமைத்து தர வேண்டிய பொறுப்பு அவருக்கு இன்னும் கூடியிருக்கிறது.
கடந்த 1996ஆம் ஆண்டு மும்பை மாநாட்டில் உரையாற்றிய அப்போதைய பாரதிய ஜனதா கட்சி தலைவர் வாஜ்பாய், ''நாங்கள் அஸ்வ மேத யாகத்தை கட்டவிழ்த்துள்ளோம். அது மும்பையை நோக்கி முன்னேறி வருகிறது '' என்று முழங்கினார்.
அந்த காலக்கட்டத்தில் பாரதிய ஜனதாவுக்கு டெல்லியில் 42.8 விழுக்காடு வாக்கு வங்கி இருந்தது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் 49 தொகுதிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றியிருந்தது. மத்திய அரசுகளில் அப்போது காணப்பட்ட தடுமாற்றத்தால், பாரதிய ஜனதா கட்சிக்கு பொது தேர்தல்களிலும் வாக்கு விழுக்காடு அதிகரித்தது.
ஒரே காலக்கட்டத்தில் டெல்லி மற்றும் மத்தியிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் உண்டு. 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஆட்சியமைத்தது. அதற்கு பிறகு, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தாலும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி என்பது மட்டும் அந்த கட்சிக்கு ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் என்பது போலாகி விட்டது.
2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மோடி அலை காரணமாக, டெல்லியில் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக அபார வெற்றி பெற்றது.
ஆனால், 2015ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் என்ற பேரலை பாஜகவை விழுங்கி 60- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.
2017ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த மூன்று மாநகராட்சி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 26 விழுக்காடு வாக்குகளே கிடைத்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் பாஜக டெல்லியில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது.
பொதுத்தேர்லில் 18 விழுக்காடாக ஆம் ஆத்மியின் வாக்கு வங்கி குறைந்தது. அதனால், மோடி மேஜிக் மூலம் டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்து ஏமாந்து போனது. டெல்லி வாக்காளர்கள் ஏன் ஆம் ஆத்மி பக்கம் சாய்ந்தார்கள் என்பதை பாஜக பகுத்தாய்வு செய்து பார்க்க வேண்டும்.
குடியுரிமை சட்டம், ஹிந்துத்துவா கொள்கை, 200 எம்.பிக்கள் , 50 அமைச்சர்கள் பிரசாரம் செய்தும் பேரணிகள், கூட்டங்கள் பல நடத்தியும் பாஜக ஏன் பலன் கிடைக்கவில்லை?
டெல்லியின் மக்கள் தொகை 140 நாடுகளை விட அதிகம். ஆனால், அடிப்படை வசதிகளை வழங்குவதில் பெரிய சுணக்கம் காணப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னத் துடைப்பம். அரசு அலுவலகங்களில் இருந்து லஞ்ச லாவண்யங்களை துடைப்பதன் அடையாளமாக துடைப்பத்தை தேர்தல் சின்னமாக வைத்துள்ள ஆத்மி கட்சி முக்கியமாக அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தி ஏழை மக்கள் மற்றும் பெண்களின் ஆதரவை பெற்றுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லியில் முதன் முதலாக ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் அரசு இலவச மின்சாரம், குடிநீர் திட்டங்ளில் அதிக கவனம் செலுத்தியது. பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மகிளா போக்குவரத்தை நடைமுறைப்படுத்தி மக்களுடன் நெருங்கத் தொடங்கியது.
இத்தகைய திட்டங்கள் மக்களிடம் இருந்து பாராட்டை பெறுகின்றன. நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தி பெண்களின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்கிறது.
சர்ச்சைகள், தேவையில்லாத அரசியல் செய்து வாக்குகளை பெற விரும்பவில்லை. எங்களது செயல்பாடுகளை கொண்டு வாக்குகளை பெறவே விரும்புவதாக ஆம் ஆத்மி சொல்கிறது. டெல்லியில் வசிக்கும் 14 சதவிகித முஸ்லிம் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஒட்டு மொத்தமாக ஆதரவு அளித்துள்ளனர்.
தேசிய அளவில் தங்கள் கட்சியின் விரிவாக்கத்துக்கு வாய்ப்பில்லை என்பதை அறிந்ததுடன் யதார்த்தத்தையும் உண்மையையும் உணர்ந்து அந்த கட்சியின் செயல்பாட்டை மாற்றிக் கொண்டது. டெல்லியில் மட்டுமே கெஜ்ரிவால் கவனம் செலுத்த தொடங்கினார்.
மத்திய அரசு மற்றும் டெல்லி அரசின் அதிகாரங்களை உச்சநீதிமன்றம் வழி வகுத்து கொடுத்துள்ளது. கெஜ்ரிவால் அரசு அதிகார வரையறைக்குள் செயல்பட்டு ஆண்டுக்கு 60,000 கோடி பட்ஜெட்டுக்குள் தலைநகரின் மேம்பாட்டுக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
உலகில் சிறந்த வாழ்க்கை தரம் வழங்கும் 140 நகரங்கள் பட்டியலில் டெல்லி 118ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி நகரின் மேம்பாட்டுக்காக கெஜ்ரிவால் அரசு கடுமையாக உழைக்க வேண்டியதும் இருக்கும்.
இதையும் படிங்க: பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராகும் இந்திய வம்சாவளி!