புதுச்சேரி: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார். பின்னர் செய்தியார்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது, “கரோனா நெருக்கடியிலிருந்து மத்திய அரசு மக்களை காப்பாற்ற தவறிவிட்டது. பொருளாதாரத்தில் தவறான அணுகுமுறையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரிவிதிப்பு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. பழைய வரிவிதிப்பு முறையை கொண்டுவர வேண்டும்” என்று கூறினார்.
மேலும், ஜிஎஸ்டி-இன் மாநில பங்கை மத்திய அரசு தரவில்லை. முறைப்படி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நீட் தேர்வு மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்கு பயந்து சிலர் உயிரிழந்தனர். தேர்வு முடிவுக்குப் பிறகு எத்தனை உயிரை பறிக்கும் என்று அச்சமாக உள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அகில இந்திய அளவில் நீட் தேர்வை கைவிட வேண்டும் என்றார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துக்கொண்டார்.