ஒரு நாட்டின் எல்லைக்குள் குற்றம் செய்து விட்டு, அல்லது குற்றம் சுமத்தப்பட்டு வேறு நாட்டுக்கு தப்பியோடிய நபர்களுக்கு எதிராக சர்வதேச காவலர்கள் அறிவிப்புகள் (நோட்டீஸ்) வழங்குவார்கள். இதன் நோக்கம் குற்றவாளி அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்களின் தகவல்களை அறிந்து அவர்களை விசாரிக்க வழிகோலுவதே ஆகும்.
அந்த வகையில் பல வண்ணங்களில் சர்வதேச அறிவிப்புகள் வெளியாகும். ஒவ்வொரு வண்ணத்தின் பின்னாலும் ஒரு அர்த்தம் புதைந்துள்ளது. அது குறித்து மிகச் சுருக்கமாக இங்கு காணலாம்.
![Various Interpol notices for indians](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5295394_notice.jpg)
1) சிவப்பு நோட்டீஸ்
நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு அவர்களை கைது செய்ய விநியோகிக்கப்படும்.
2) மஞ்சள் நோட்டீஸ்
காணாமல் போன சிறார்கள் மற்றும் பெரியோர்கள் தங்களை அடையாளம் காண முடியாத நபர்கள் குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ள அளிக்கப்படும்.
3) நீல நிற நோட்டீஸ்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் இருப்பிடம் மற்றும் தகவல்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ள அளிக்கப்படும்.
4) கருப்பு நோட்டீஸ்
அடையாளம் தெரியாத பிணங்கள் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள கருப்பு நோட்டீஸ் அளிக்கப்படும்.
5) பச்சை நோட்டீஸ்
பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குற்றவாளிகள் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்ள பச்சை நோட்டீஸ் விநியோகிக்கப்படும்.
6) ஆரஞ்சு (செம்மஞ்சள்) நோட்டீஸ்
ஒரு நிகழ்வைப் பற்றி அல்லது தனி நபரை பற்றி எச்சரிக்க இந்த வகை நோட்டீஸ்கள் கொடுக்கப்படும்.
7) ஊதா நிற நோட்டீஸ்
குற்றவாளியின் உடைமைகள், பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எடுக்க விநியோகிக்கப்படும் நோட்டீஸ்.
சர்வதேச காவலர்கள் இந்த வகை நோட்டீஸ்கள் (அறிவிப்புகள்) வெளியிட குறிப்பிட்ட வரையறைகள் உள்ளன. இன்டர்போல் (சர்வதேச காவலர்கள்) எந்த ஒரு தனிநபர் மீதும் குற்றச்சாட்டின் அடிப்படையிலும், எதிர்தரப்பின் ஆவணங்களின் அடிப்படையிலும் அறிவிப்பு வெளியிடலாம். ஆனால் அந்த தனிநபர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவேக் கருதப்படுவார்.
இதையும் படிங்க: நித்யானந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்