உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன்-ரேனி பகுதியில் பிப்.7ஆம் தேதி காலை பனிப்பாறைகள் திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ரிஷிகங்கா மின்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் வசித்தவர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், இந்தோ-திபேத் எல்லை காவல் படையினரும், ராணுவ வீரர்களும் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். மீட்பு பணிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 32 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 206 பேர் மாயமாகியுள்ளனர். தபோவன் சுரங்கத்தில் மட்டும் சுமார் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேரலையாகி வந்த வெள்ளம்; உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பின் வைரல் காணொலி