மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 18 நாள்களைக் கடந்து போராட்டம் நீடித்துவருகிறதால், அதனை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று டெல்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்து, புதிய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இச்சந்திப்பின்போது, உத்தரகாண்ட் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, கல்வித் துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் தோமர், "உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக என்னைச் சந்தித்தனர். சட்டங்களைப் புரிந்துகொண்டு, அதனை ஆதரித்த விவசாயிகளுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோயில் விவகாரம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு கிளம்பியது போலவே, வேளாண் சட்டங்களுக்கும், தற்போது எதிர்ப்புகள் வந்துள்ளன.
வெறும் எதிர்ப்புகள் தெரிவிப்பதற்கு என்றே சிலர் (எதிர்க்கட்சிகள்) இருக்கின்றனர். அனைத்துத் திட்டங்களையும் எதிர்ப்பது என்பது அவர்களது வழக்கமாகிவிட்டது. வேளாண் சட்டங்களைப் பொறுத்தவரை, கடந்த பல ஆண்டுகளாகவே விவாதங்கள் நடந்துவந்தன. ஆனால், முந்தைய அரசுகளால் இதனைச் செய்திட முடியவில்லை" எனத் தெரிவித்தார்.