உத்தரகாண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டத்தில் காதிமாடு பகுதியில் உள்ள பந்த் நகர் விடுதி மற்றும் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்த நோயாளிகளுக்கு சரியான உணவுகளும், வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நோயாளிகள், தனிமைப்படுத்தல் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கரோனா நோயாளி ஒருவர் கூறுகையில், "இங்கு எங்களுக்குச் சரியான உணவு கிடைக்கவில்லை. அதேபோல், கழிப்பறை வசதியும் ஒழுங்காக ஏற்பாடு செய்யவில்லை" எனக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த உதம் சிங் நகரின் தலைமை மருத்துவ அலுவலர், கரோனா நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையைத் தீர்த்து வைத்தார்.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் கூறுகையில், "உணவு, கழிப்பறை பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் குழந்தைகளும் பெற்றோர்களுடன் தங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்களைத் தனித்து வைப்பதற்கான வசதிகள் தற்போது இல்லை. எனவே, அவர்களுக்காக வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.