கரோனா தீநுண்மிக்கு எதிரான போரில் முன்கள வீரர்களாக மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் தன்னலமின்றி அயராது உழைத்துவருகின்றனர்.
அவர்களை மதிக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டாலும், மருத்துவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில், கரோனா தீநுண்மியைப் பரப்புவதாகக் கூறி மருத்துவர் ஒருவரை அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் டியோரியா மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் (Quarantine Centre) பொறுப்பாளராக இருப்பவர் மருத்துவர் ராஜிவ் ரஞ்சன்.
இவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ராம்நாத் டியோரியா பகுதியில் உள்ள திலீப் பஸ்வானின் வீட்டில் வாடகைக்கு இருந்துவருகிறார்.
இந்நிலையில், மே 18ஆம் தேதி இரவு அக்கம்பக்கத்தினர் மூன்று பேருடன் அவரது அறைக்குச் சென்ற உரிமையாளர் திலீப் பஸ்வான், வீட்டை உடனடியாகக் காலி செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதை எதிர்த்து கேள்வி கேட்ட மருத்துவரை திலீப் பஸ்வானும், உடன் சென்றோரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தான் கரோனா தீநுண்மியைப் பரப்புவதாகக் கூறி தன்னைத் தாக்கியதாக மருத்துவர் ராஜிவ் ரஞ்சன் காவல் துறையிடம் புகார் தெரிவித்தார். மேலும் தன்னை வீட்டை காலிசெய்யுமாறு அவர்கள் (வீட்டின் உரிமையாளர், அக்கம்பக்கத்தினர்) தொடர்ந்து வற்புறுத்திவந்ததாகவும் மருத்துவர் குற்றஞ்சாட்டினார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மருத்துவரைத் தாக்கிய திலீப் பஸ்வான் உள்ளிட்ட மூன்று பேரை கைதுசெய்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் காவல் துறையினர் கூறுகையில், "மருத்துவர் ராஜிவ் ரஞ்சன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
கரோனாவுக்கு எதிரான போரில் முன்கள வீரர்களாகப் பணிபுரியும் மருத்துவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடந்தால் பொறுத்துக் கொள்ளப்படாது" என்று எச்சரித்தனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் பொருளாதார அறிவிப்புகள் பயன் தராது: சுபாஷ் சந்திரா