கரோனா வைரஸூன் தீவிரத்தை கவனத்தில் கொண்டு, உத்தரப் பிரதேசத்திலுள்ள 71 சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட இருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இது சாத்தியமாகி உள்ளது. இவர்களுக்கு பிணை, இடைக்கால பிணை ஆகியவற்றின் கீழ் தற்காலிக விடுதலை கிடைக்கிறது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, மாநில அரசாங்கத்தால் மார்ச் 27ஆம் தேதி நீதிபதி பங்கஜ் குமார் ஜெய்ஸ்வால் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தலைமையில் மாநிலத்திலுள்ள 71 சிறைகளிலிருந்து 11 ஆயிரம் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இவர்கள் அதிகப்பட்சமாக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் ஆவார்கள். அதற்கு குறைவாக தண்டனை பெற்றவர்களும் எட்டு வார பரோலில் விடுவிக்கப்படுகின்றனர்” என கூறப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் சிறைக் கைதிகள் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே கைதிகளை பரோலில் விடுவிப்பது குறித்து பரிசீலிக்க உயர் மட்ட குழுக்களை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதையடுத்து உத்தரப் பிரதேச மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பு 27 ஆக உள்ளது. உலகம் முழுக்க கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆறு லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'சோனியா காந்தியை காணவில்லை'- ரேபரேலியில் ஓட்டப்பட்ட சுவரொட்டிகள்!