நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை எனக் கூறி கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.
மாநில அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, கரோனா நோயாளிகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு அனைத்து மருத்துவ பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அம்மாநில மருத்துவ கல்வி இயக்குநர் கே கே குப்தா உத்தரவிட்டார். மேலும், நோயாளிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச ஏதுவாக மருத்துவமனைகளுக்கு இரண்டு மொபைல் போன்கள் வழங்கப்படும் என்றும், அதில் அனுமதிபெற்று நோயாளிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக டிவீட் செய்துள்ள உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், "மொபைல் போன்கள் மூலம் தொற்று பரவினால், அவை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். தனிமைப்படுத்த நோயிகளுக்கு மொபைல் போன்கள் பயன்படுத்த அனுமதித்தால் மன ஆதரவை அளித்து தனிமையை சமாளிக்க உதவுகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனைகளின் மோசமான நிலை குறித்த உண்மை பொது மக்களை சென்றடைவதை தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ள அவர், மொபைல் போன்களினால் தொற்று பரவினால் அதனை சுத்திகரிக்க வேண்டுமே தவிர, தடை விதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பத்து மில்லியன் குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்படும்!