கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருந்த ஊரடங்கு பின் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கால் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவருகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை அறிவித்துவருகின்றன. அதன்படி உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள ஆதரவற்றோருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்துறை கூடுதல் செயலர் அவ்னிஷ் அவஸ்தி, "ஆதரவற்றோருக்கு ரூ. 1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள ஆதரவற்றோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்", என்றார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 23,70,000 தொழிலாளர்களுக்கு பராமரிப்புத் தொகையாக ரூ. 236.98 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், உத்தர பிரதேசத்திலுள்ள பல்வேறு மாவட்டங்கள் கோவிட்-19 தொற்று இல்லாத மாவட்டங்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். அதன்படி முதல்கட்டமாக மாநிலத்திலுள்ள சுமார் 11 லட்சம் கட்டட தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் ரூ. 1 கோடி: கெஜ்ரிவால்