உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் குல்தீப் சிங்குக்கு சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் அவர் பாஜகவிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து விசாரணையில், விபத்தில் படுகாயமடைந்த சிறுமியின் உடல்நிலை சீராகவுள்ளதாகவும் ஆனாலும் இன்னும் முழுமையாக ஆபத்தான நிலையிலிருந்து வெளியே வரவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெவிக்கப்பட்டது. மேலும், வழக்கின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமாவை பாதுகாப்பு கருதி டெல்லியிலுள்ள திகார் சிறைச் சாலைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரப் பிரதேச சிறையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா பத்திரமாக இருப்பதாக வாதாடினாலும் உபி வழக்கறிஞர் அவரை திகார் சிறைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.