உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண், கடந்த வியாழக்கிழமை அந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு நபர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கடத்திச் சென்றுள்ளனர். அதன்பின் அப்பெண்ணை உயிருடன் தீ வைத்து அவர்கள் கொளுத்தினர்.
பின்னர் 90 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் முதலில் லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு ஹெலிக்காப்டர் மூலமாக அப்பெண்ணை அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து பெண்ணை எரித்த ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் அறிவித்திருந்தார். மேலும் அப்பெண்ணின் சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்குப் போராடிய அப்பெண் நேற்று இரவு 11.40 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது தங்களால் முடிந்த வரை அப்பெண்ணை காப்பாற்ற முயன்றோம் இருப்பினும் அவரை தங்களால் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் இரண்டு பேர் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டது. மற்றொரு நபர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆனால் தற்போது நீதிக்காக போராடியப் பெண் அக்கயவர்கள் தீக்கிரையாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.