உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து உத்தரப் பிரதேச காவல் துறை விசாரித்து வந்த சூழலில் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட நான்கு பேர் சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார்கள். இந்த விபத்தில், பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியான சிறுமியின் அத்தை அந்த விபத்தில் உயிரிழந்தார், பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமிக்கு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதைத் தொடர்ந்து, அவர் லக்னோவிலிருந்து, டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டார். பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முன்னதாக, விபத்தில் சிக்கிய சிறுமியின் வழக்கறிஞரின் உடல் நிலை மோசமடைந்ததால், அவருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.