உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் 17 வயது சிறுமி, பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங்கால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். ஆனால், குல்தீப் சிங்கின் பெயரை குறிப்பிடாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதாக பாதிக்கப்பட்ட அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதனால் கோபம் அடைந்த குல்தீப் சிங்கின் சகோதரர் அதுல் சிங், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை கடுமையாக தாக்கினார். பின்னர், சிறுமியின் தந்தையை வேறு ஒரு வழக்கில் காவல் துறை கைது செய்தது. நீதிமன்ற காவலில் இருந்த அவரின் தந்தை சர்ச்சைக்குரிய முறையில் உயிரிழந்தார். காவல் துறை செய்த சித்திரவதையால்தான் அவர் இறந்தார் என சமூக ஆர்வலர்கள் உறுதியாக கூறுகின்றனர். பின்னர், சிறுமியின் தந்தையை தாக்கிய அதுல் சிங் கைது செய்யப்பட்டார்.
உன்னாவ் பாலியல் வழக்கையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சர்ச்சைக்குரிய வகையில் இறந்த விவகாரத்தையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்க விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. குல்தீப் சிங், சசி சிங் ஆகியோர் மீது பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சிறுமியின் தந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதுல் சிங் உட்பட ஐந்து பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, சிறுமியின் தந்தையை பொய்யான வழக்கில் சிக்கவைத்ததற்கு குல்தீப் உட்பட ஒன்பது பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை பரபரப்பாக சென்றுகொண்டிருந்த சூழலில், சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் சிறுமியும், அவரது வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர். மேலும் அவரது இரண்டு அத்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்த இரண்டு பேரில் ஒருவர் இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்பது கவனிக்கப்பட வேண்டியது.
பாதிக்கப்பட்ட சிறுமியையும், முக்கிய சாட்சியையும் கொலை செய்ய முயற்சித்ததாக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கு ஆதரவாக இந்த வழக்கில் காவல் துறையினர் பலர் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது எனக் கூறி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஜனநாயகம் மேல் நம்பிக்கை வைப்பவர்களின் கடைசி ஆயுதமாக இருப்பது நீதிமன்றம். இந்த வழக்கில் குற்றம் செய்த அனைவருக்கும் பாரபட்சம் காட்டாமல், அதிகாரவர்க்கத்திற்கு அடிபணியாமல் நீதிமன்றம் தகுந்த தண்டனையை வழங்கவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது.