உத்தரப் பிரேதச பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக 17 வயது சிறுமி ஒருவர் குற்றஞ்சாட்டி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அச்சிறுமியின் தந்தையை குல்தீப் உட்பட பலர் கடுமையாக தாக்கினர். பின்னர், மோதலில் ஈடுபட்டதாகக் கூறி படுகாயம் அடைந்த அவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவலில் இருக்கும்போதே அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், உத்தரப் பிரதேச மாவட்ட நீதிமன்றத்திலிருந்து டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பாலியல் வழக்கின் குற்றவாளி குல்தீப் சிங் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் குல்தீப் உட்பட 7 பேர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, குல்தீப் செங்கார் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்