நாட்டில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக ரயில் போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அவர்களது சொந்த மாநிலத்தில் சேர்ப்பதற்காக சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்பட்டன.
மேலும் சில சிறப்பு ரயில்களை இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில் வரும் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஊரடங்கு தளர்விற்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மேலும் சில சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாக இந்தியன் ரயில்வே மாநில அரசுகளுடன் ஆலோசித்து வருவதாக இந்தியன் ரயில்வே அலுவலர் தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சக வட்டாரங்களின்படி, தேசிய போக்குவரத்துத்துறை மேலும் 100 ரயில்களை எதிர்வரும் நாள்களில் இயக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் அல்லாத பகுதிகளில் ஊரடங்கினை அமல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.