கேரளாவைச் சேர்ந்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தலைமையில் அம்மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஸ்பெய்ன் நாட்டிலிருந்து திரும்பிய இரண்டு மருத்துவர்கள் பங்கேற்றனர். தற்போது அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதை அறிந்த அமைச்சர் முரளிதரன் டெல்லியில் உள்ள தனது வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் அவர் தவிர்த்துள்ளார்.
கரோனா வைரஸ் அறிகுறியுள்ள இரண்டு மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தொடர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் செயல்பட்டுவந்த கதிரியக்க ஆய்வகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.
இதையும் படிங்க:கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வாளர் குழுவில் இந்தியர்!