வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க, மே 7 ஆம் தேதி முதல் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை மீட்க, இரண்டு பெண் பைலட்டுகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இன்று (மே.9) புறப்பட்டுச் சென்றனர்.
இதில், ஒரு விமானம் தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்தும், மற்றொரு விமானம் கேரளாவின் கொச்சியிலிருந்தும் புறப்பட்டது. இதில் ஒரு ருசிகரமான சம்பவம் என்னவென்றால், மே 10ஆம் தேதி (நாளை) அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்தச் சூழலில், தாய்மார்களாக இருக்கும் இரண்டு பெண் பைலட்டுகளும், அன்னையர் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து, கோலாலம்பூருக்கு மதியம் 1.11 மணியளவில் புறப்பட்ட மீட்பு விமானத்தில் கேப்டன் கவிதா ராஜ்குமாரும், கேப்டன் பிந்து செபாஸ்டியன் கொச்சியிலிருந்து-மஸ்கட் செல்லும் விமானத்தின் மூலம் இன்று மதியம் 1.17 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர். இது குறித்த தகவலை ஏர் இந்தியா எகஸ்பிரஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 535 ஆக உயர்வு!