பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பெரும் ஆபத்துகள் குறித்து அறிஞர்கள் பலரும் வேதனை தெரிவித்துவருகின்றனர். சமீபத்தில் ஐநாவில் பருவநிலை மாற்றம் குறித்து நடந்த மாநாட்டிலும் கூட ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரெட்ட தன்பெர்க் இதுகுறித்து பேசிய பேச்சு உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், காலநிலை மாற்றத்தைப் பற்றி ஆராயும் சர்வதேச குழு (ஐபிசிசி) 'மாறிவரும் காலநிலையில் பெருங்கடல்கள் மற்றும் கிரையோஸ்பியர்' என்ற தலைப்பில் சிறப்பு அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகிவருவதால் 'இந்து குஷ்' உள்ளிட்ட மலைப் பகுதிகளில் விவசாயம் குறைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்து குஷ் பகுதியிலுள்ள பனிப்பாறைகள் காரணமாக 12 கோடி மக்கள் நேரடியாகவும் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மறைமுகமாகவும் நீர்ப்பாசனம் பெற்றுவருகின்றனர். புவி வெப்பமயமாதல் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக இந்த இந்து குஷ் மலைப்பகுதிகள் உள்ளன.
பல பருவநிலை அறிஞர்கள் ஒப்புக்கொண்டபடி புவியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்போது, இப்பகுதியிலுள்ள வெப்பம் 3.5 - 6 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 36-64 விழுக்காடு பனிப்பாறைகள் உருகும் ஆபத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழைக் காரணமாக ஏற்படும் வெள்ளமும் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. கடல் நீர்மட்டம் 50 செ.மீ. உயருமேயானால், சுமார் 15 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படும் பெரும் அபாயமும் உருவாகியுள்ளது.
மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட உலகின் 46 நகரங்கள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. முக்கியமாக மும்பை வரும் காலங்களில் மிக அதிக அளவிலான வெள்ளத்தையும் பெரும் மழைப்பொழிவையும் சந்திக்கவுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையானது 195 நாடுகளால் ஏற்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: புவியின் மீது கொண்ட காதல் - பள்ளிப் படிப்பைத் துறந்த 16 வயது சிறுமி!