காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்தே அங்கு ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நடமாடுவதாக நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து காவல்துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் லஷ்கர்-இ-தொய்பாவின் இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் சவுகத் அகமது மீர், சவுகத் அகமது யது என தெரியவந்தது. அவர்கள் இருவரும் வடக்கு காஷ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "அபித் காயூம் லோன் என்ற மருத்துவ மாணவர் காணாமல் போனதாக பட்டான் காவல் நிலையத்தில் புகார் உள்ளது. ஆனால், அவர் பாகிஸ்தான் செல்வதற்கான விசாவை பெறுவதற்கு சவுகத் அகமது மீர், சவுகத் அகமது யது ஆகியோர் உதவி செய்துள்ளனர். பின்னர், பாகிஸ்தான் சென்று பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார். இதேபோல், மேலும் நான்கு மாணவர்கள் பாகிஸ்தான் செல்வதற்கு இவர்கள் உதவியுள்ளார்கள்" என்றார்.
இதையும் படிங்க: ராணுவ முகாமில் வெடிவிபத்து: ராணுவ வீரர் ஒருவர் பலி