சமூக வலைதளங்களில் முக்கிய பங்காற்றிடும் ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை உலக அளவில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல்களை பரிமாற்றும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வரும் நிலையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று ஹேக் செய்துள்ளனர்.
ஹேக் செய்யப்பட்ட அவரது கணக்கிலிருந்து இனத்தூண்டலை பிரதிபலிக்கும் விதமாக சில தகவல்கள் பகிரப்பட்டது. 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த ட்வீட்டுகள் பகிரப்பட்ட நிலையில், பின்னர் தானாகவே அழிக்கப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிறுவனம், “ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. அவருடைய கணக்கை ட்விட்டர் மூலம் இணைக்கப்பட்டு, செல்ஃபோன் மூலமாக ஹேக் செய்துள்ளனர். முதலில் செல்ஃபோன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஹேக்கர்கள், எஸ்.எம்.எஸ் வாயிலாக ட்வீட் பதிவாகும்படி செய்துள்ளனர் என விளக்கமளித்தனர்.
ட்விட்டர் சி.இ.ஓவின் கணக்கே ஹேக் செய்ப்பட்ட செய்தி ட்விட்டர் பயனாளிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மூலம் ட்விட்டரில் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாகியுள்ளது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.