அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் 24,25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார். அதிபராக பதவியேற்றப்பின் ட்ரம்பின் முதல் இந்தியப் பயணம் இது என்பதால் அவரது வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பின் வருகையின்போது முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்த ட்ரம்ப், வர்த்தக ஒப்பந்தம் தற்போதைக்கு கையெழுத்தாவதற்கு வாய்ப்பில்லை. அதன் முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என்றார். மேலும், இந்தியா அமெரிக்காவுக்கு உரிய மரியாதையை அளித்ததில்லை, பிரதமர் மோடியின் அணுகுமுறை நல்ல மாற்றத்தை கொண்டுவரும் எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, ட்ரம்ப் கூறிய கருத்து இந்தியாவை அவமதிப்பதாக உள்ளது எனவும், இந்திய - அமெரிக்க உறவை பலவீனப்படுத்தும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் தொடங்கி, மன்மோகன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி காலத்தில் இந்திய அமெரிக்க உறவு சிறப்பான நிலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இத்தகையை முன்னேற்றத்தை சீர்குலைக்கும் விதத்தில் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு பிரதமர் மோடி உரிய விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மடத்தனம் ஜிஎஸ்டி - சுப்பிரமணியன் சுவாமி